×

பிரதமர் மோடி விஸ்வகுரு இல்லை, மவுனகுரு பாஜ ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி: புதுச்சேரி பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: பிரதமர் மோடி விஸ்வகுரு இல்லை, மவுனகுரு என்றும், பாஜ ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்றும் புதுச்சேரி பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து, திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

விடுதலைப் போராட்ட வீரரின் குடும்பத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம், இப்போது இரண்டாம் விடுதலைப் போராட்டத்தில் வேட்பாளராக, உங்கள் முன்னால் இருக்கிறார். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு திமுகவும் காங்கிரசும் பாடுபட்டால், புதுச்சேரியை எப்படியெல்லாம் பின்னோக்கிக் கொண்டு செல்லலாம் என்று பாஜ செயல்படுகிறது. புதுச்சேரி நிர்வாகத்தை சீர்குலைத்தது பாஜ. இப்படி செயல்பட்டது யார் என்றால், துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி. ஐ.பி.எஸ். ஆக இருந்தவர் அவர். சட்டத்தை நிலைநாட்ட போலீசாக வேலை பார்த்த அவரே, துணைநிலை ஆளுநராக அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டார்.

இப்படி, தமிழ்நாட்டிலும் ஒரு ஆளுநர் இருக்கிறார். அவரும் ஐ.பி.எஸ்.ஆக இருந்தவர்தான். நான் பல நேரங்களில் சொல்வதுண்டு, அவர் தொடர்ந்து இருக்கட்டும். அவர் இருந்தால், தி.மு.க.விற்கு அங்கு பெரிய பிரசாரமே நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறையில் பதவிக்காலம் முடிந்ததும் இவர்களை எல்லாம் ஆளுநர்களாக்கி, அரசியல்சட்டத்தை மீறி பா.ஜ.வின் ஏஜென்டுகள் போன்று விளம்பரத்திற்காகவே செயல்படுகிறார்கள்.

இப்படி ஆளுநர்கள் தொல்லை கொடுப்பது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும்தான் என்று நினைக்காதீர்கள். அதிலும் புதுச்சேரி விதிவிலக்கு. இங்கு ஆளும் பா.ஜ. கூட்டணி கட்சி முதல்வர் ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி. பாஜவைப் பொறுத்தவரைக்கும், புதுச்சேரியின் முன்னேற்றம் – மக்களின் வளர்ச்சி இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்; அதற்கு என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். இதுதான் பா.ஜவின் கொள்கை.

இந்த அவலங்கள் எல்லாம் தீர, இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். நாடு மீண்டும் ஜனநாயகப் பாதையில் கம்பீரமாக நடைபோட வேண்டும். மாநிலங்களுக்கும்-நாட்டுக்கும் நம்பிக்கையளிக்கும் தேர்தல் அறிக்கையாகக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இருக்கிறது. இது இல்லாமல் திமுக சார்பில் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையாக நாங்களும் வெளியிட்டிருக்கிறோம்.  பா.ஜ.வால் புதுச்சேரி அடைந்த நன்மை என்ன? “நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர் கூட தாக்கப்பட மாட்டார் கைது செய்யப்பட மாட்டார்” என்று வீரவசனம் பேசினாரே பிரதமர் மோடி.

ஆனால், இலங்கைக் கடற்படையினரால் காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்தாரா? படகுகள் பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்க முடிந்ததா? அவர் விஸ்வகுரு இல்லை, மவுனகுரு. அதுமட்டுமல்ல, பா.ஜ. கூட்டணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது! அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட படுபாதகச் செயல்! நாடே அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததே.

பாஜ கூட்டணி ஆட்சியில், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது. இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு பா.ஜ. ஆட்சியில் கேள்விக்குறியாக இருக்கிறது. பா.ஜ. வேட்பாளரின் நன்மைக்காகதான் அ.தி.மு.க. இங்கு தேர்தலில் நிற்கிறது என்பது புதுச்சேரி மக்களான உங்களுக்கே நன்றாகத் தெரியும். இந்தியா கூட்டணியின் வேட்பாளராக – காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த – முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கும் வாக்கு, புதுச்சேரியைக் காக்கும் வாக்கு. இவ்வாறு அவர் பேசினார்.

* மக்களை ஏமாற்ற நானும் ஓபிசி என்கிறார் மோடி
ஒன்றிய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்துவேன் என்று எங்கேயாவது மோடி வாய் திறந்தாரா? ஆனால், மக்களை ஏமாற்ற நானும் ஓ.பி.சி. என்று சொல்கிறார். மோடி ஆட்சிக்கு வரும்போது 119 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய், ஒரு கட்டத்தில் 29 டாலர் வரை சரிந்தது.

ஆனால், அந்த அளவு பெட்ரோல், டீசல் விலை மக்களுக்காகக் குறைக்கப்பட்டதா? ஒரு சில கார்ப்பரேட்டுகள் மட்டும்தான் பெரிய அளவில் பலனடைந்தார்கள். கோடிக்கணக்கான மக்களுக்காக விலையைக் குறைக்காமல், ஒரு சிலர் மட்டும் லாபம் ஈட்டினால் போதும் என்று ஆட்சி நடத்தும் இந்த இரக்கமற்ற பா.ஜ. ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

The post பிரதமர் மோடி விஸ்வகுரு இல்லை, மவுனகுரு பாஜ ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி: புதுச்சேரி பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Vishwaguru ,Mounaguru ,BJP ,Chief Minister ,M.K.Stal ,Puducherry ,CHENNAI ,M.K.Stalin ,Modi ,Maunaguru ,Parliamentary Lok Sabha election ,Congress ,Vaithilingam ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...